முதல் பக்கம் வெற்றிடம்; நாளிதழ்கள் நூதன போராட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் நேற்று வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில், செய்திகள் எதுவுமின்றி வெற்றிடமாக வெளியானது.

காஷ்மீர் மாநிலத்தில், ‘காஷ்மீர் ரீடர்’ மற்றும் ‘கிரேட்டர் காஷ்மீர்’ ஆகிய இரண்டு ஆங்கில நாளிதழ்களும் விற்பனையில் முன்னணி வகிக்கின்றன. இந்நிலையில், இந்த இரண்டு நாளிதழ்களுக்கு வழங்கி வந்த விளம்பரங்களை, எந்த வித அதிகாரப்பூர்வ உத்தரவும் காரணமும் தெரிவிக்காமல், வாய்மொழி உத்தரவு மூலம் ஜம்மு காஷ்மீர் அரசு திடீரென நிறுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ‘காஷ்மீர் எடிட்டர்ஸ் கில்டு’ நாளிதழ், ‘பத்திரிகைகளின் சுதந்திரத்தை மாநில அரசு பறிப்பதுடன், விளம்பர வருமானத்தையும் திட்டமிட்டு தடுக்கிறது’என்று கடுமையாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், அரசுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, காஷ்மீரில் நேற்று வெளியான நாளிதழ்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் செய்திகள் ஏதுமின்றி வெற்றிடமாக்கி பிரசுரித்தன. அத்துடன், அனைத்து நாளிதழ்களின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு, ஸ்ரீநகரில் கண்டன பேரணியும் நடத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!