மிலேனியம் சவால் நிதியத்தினால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் – விமல் வீரவன்ச

அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கீழ் செயற்படும் மிலேனியம் சவால் நிதியத்தின் நோக்கம், காணி வங்கிச் சட்டம் என்ற பெயரில், சிறிலங்காவின் காணிச் சட்டங்களை மாற்றுவது தான்.

அனைத்து அரச காணிகளையும் இந்த காணி வங்கியின் கீழ் கொண்டு வரவும், அந்தக் காணிகளை வெளிநாடுகள் உள்ளிட்ட எவருக்கும் வழங்குவதற்கும் அவர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

கைத்தொழில் வலயத்துக்காக, திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மின்சார தொடருந்து சேவை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களின் ஊடாகவும் உயர்சக்தி மின்சார இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

அமெரிக்காவின் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கும் நிறுவனங்கள் மாத்திரமே, கைத்தொழில் வலயங்களில் ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில், முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்.

திருகோணமலை துறைமுகத்துக்கு அப்பால், 6000 அமெரிக்கப் படையினர் மற்றும் 100 விமானங்களுடன் அமெரிக்க கடற்படைக் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்க விநியோக மையங்களுக்கு எமது நிலங்களை அரசாங்கம் வழங்கப் போகிறதா?

வெளிநாட்டவர்களுக்கு எமது காணிகளை வழங்கினால், எமது நாட்டு மக்களின் நிலை என்னவாகும்?

இதுமாத்திரமல்ல, பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் ஆகியவற்றையும் இந்தியாவுக்கு வழங்க இந்த அரசாங்கம் தயாராகி வருகிறது.

விரைவில் எமது மக்கள் வெளிநாட்டவர்களின் அடிமையாகி விடுவார்கள்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!