“ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும்”

ஜனாதிபதியின் அனுமதியின்றி ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரணை வழங்கியது. அவ்வாறு இணையனுசரணை வழங்குவது குறித்து பாராளுமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கை குறித்த தீர்மானத்தை விலகிய போதே, அந்த தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகியிருக்க முடியும். எனினும் இவர்கள் அதனைச் செய்யவில்லை.

இந் நிலையில் இம்முறை ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தீர்மானமொன்றினை முன்வைக்கவுள்ளதுடன், அதற்கு இணையனுசரணை வழங்குவோம் என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

எனினும் ஜனாதிபதி இம்முறை பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் அனுமதியின்றி, அவருக்கு அறிவிக்காமலேயே இம்முறையும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!