இராணுவத்தை தூக்குமேடைக்கு அனுப்பக் கூடாது! – தயாசிறி

இலங்கை இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் அரசாங்கம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஜெனீவா தீர்மானத்திற்கு இந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதிலிருந்து பாரிய அழுத்தங்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. யுத்தத்தால், அனைத்து இன, மத, மொழி மக்களும் பாதிக்கப்பட்டார்கள். இராணுவமும் சரி, புலிகளும் சரி பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுத்தார்கள். எனவே இதுகுறித்து இரு தரப்பினரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

யுத்தத்துக்கு அப்பால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் நாம் அதனை, விசாரணைக்கு உட்படுத்துவதை ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை. தற்போது, இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் யுத்தம் செய்த இராணுவத்தை பாதுகாக்கும் கடப்பாட்டில் இருக்கிறோம். அவர்களை தூக்குமேடைக்கு அனுப்பும் செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடாது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நாம் எதிர்ப்பினை வெளியிடவில்லை. எனினும், இன்று கடந்த காலங்களை விட சர்வதேச ரீதியாக பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. எமக்கு எதிர்ப்பினை வெளியிடும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இன்று பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்களை அமுல்படுத்துகின்றன. எனவே, ஜெனிவாவில் இந்த சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்று அரசாங்கமே சிந்தித்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!