‘போயிங்-737’ ரக விமானங்களுக்கு தடை விதித்தது இந்தியா.

எத்தியோப்பிய விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களை இயக்க இந்தியா தடை விதித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் உலகளவில் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. பெரிய எஞ்சின், குறைவான எரிபொருள் செலவு உள்ளிட்ட அம்சங்களால் விமான நிறுவனங்கள் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை விரும்பி வாங்குகின்றன. கடந்த ஜனவரி மாதம் வரை 350 விமானங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 661 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 157 பேரை பலி கொண்ட எத்தியோப்பியா விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களில் பிரச்சனை இருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போயிங் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேக்ஸ் 737 விமானத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் முழு அளவில் பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க விமான நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது. தேவையற்ற அச்சத்தால் விமானங்களை தரையிறக்கப் போவதில்லை என்றும், பயணிகள் அச்சமின்றி பயணிக்கலாம் என்றும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!