வடக்கில் மதிய நேர நடமாட்டங்களை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

வடக்கில் அதிக வெப்பமான சூழல் நிலவி வருகின்ற நிலையில், பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால், மதிய நேரங்களில் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கில் அதிகரித்துள்ள வெப்ப நிலை குறித்து யாழ்ப்பாணம், பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வடக்கில் அதிக வெப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்தக் காலநிலை மாற்றத்தினால் பொது மக்கள் மத்தியிலே அவர்கள் உடல் நிலையில் பல பாதிப்புக்கள் ஏற்படலாம். குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இது அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. வெய்யிலில் அல்லது வெளிச் சூழலிலே ஏதூவது வேலை செய்த கொண்டிருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி அவர்களை ஓய்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். இக்காலத்தில் நீர், இளநீர் அல்லது பழரசங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

இயலுமான வரைக்கும் உங்களுடைய அன்றாட வேலைகளை காலை வேளைகளில் அல்லது மாலை வேளைகளில் அதை ஒழுங்குபடுத்திக் கொள்வது பொருத்தமானதாக இருக்கும். மேலும் மதிய வேளைகளில் வெளிப்புறச் சூழலில் வேலை செய்வதைத் தவிர்த்துக் கொள்வது மிகநல்லது.

மேலும் அவசர மருத்துவ உதவிகளுக்காக 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!