இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் – மகிந்த ராஜபக்ச

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள,சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா அதிலிருந்து விலகியுள்ளது.

இவ்வாறான நிலையில், உள்நாட்டு விவகாரங்களில் – சிறிலங்காவின் நீதித்துறையில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கும் வகையிலான தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக் கூடாது.

2015 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டதன் அடிப்படையில், மனித உரிமைகள் என்ற போர்வையில், நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள், பாதுகாப்புப் படைகளுக்கு தீங்கிழைக்கும் பல சட்டங்கள் நாடாளுமன்றத்தில் வரையப்பட்டன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் 40 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறும், சிறிலங்காவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செலயகம் ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் வைத்து கண்காணிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!