நியூசிலாந்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அருகே உள்ள இரண்டு பள்ளிவாசல்களிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெறும் போது 200 க்கும் அதிகமான பொதுமக்கள் இருந்திருக்கலாமென நியூசிலாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம் அத்துடன் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இரு பள்ளிவாசல்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, நியூசிலாந்து பொலிஸார் பாதுகாப்புக் கருதி நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 28 வயதான அவுஸ்திரேலிய நாடடைச் சேர்ந்த துப்பாக்கிதாரி சம்பவத்தை நேரலையாக வீடியோவாக பதிவாக்கியுள்ளார். அவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிதாரி அவுஸ்திரேலிய நாட்டவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு இறந்த உடல்கள் ஒரு பள்ளிவாசலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிறைச்ட்சேர்சின் அல்-நூர் பள்ளிவாசலில் 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நியூசிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எங்கு பார்த்தாலும் இரத்தக்கறை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுததாரரி பயணித்த கார் சம்பவம் இடம்பெற்ற பள்ளிவாசலுக்கு 3 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!