த.தே.கூ. வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்- சாந்தினி விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு, கூட்டமைப்பு கால அவகாசம் வழங்குமா என்பது தொடர்பிலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா விளக்கம்.

கேள்வி – பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது கடுமையான விமர்சனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதகமான வரவு செலவுத்திட்டம் என்ற வகையில் கருத்தக்கள் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இது தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் – தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையானது மகிந்த ராஜபக்ஷ அரசு மீண்டும் வரக்கூடாது என்ற நோக்கம் அங்கு இருந்தது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த அரசுக்கு எதிராக வாக்களிக்குமாகவிருந்தால், மகிந்த ராஜபக்சவுடைய குழுவிற்கான ஒரு காந்திரமான தன்மை ஒன்று அவர்களுக்கு வரும் ஆகவே இந்த மகிந்த ராஜபக்ஷ அரசினுடைய ஆட்சியை இந்த மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. விரும்பமாட்டார்கள்.

அந்த கொடூரம், அவர்கள் செய்த அட்டூழியங்களை நாங்கள் மறந்துவிட மாட்டோம். அதுதான் அதனுடைய அடிப்படை நாதமாகவிருக்கின்றது.

கேள்வி – ஆனால் மக்கள் ஒரு இரட்டை நிலைப்பாட்டில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்ற கருத்தை முன்வைக்கிறார்களே.

பதில் – மக்களைக் குழப்புவதுதான் ஏனைய அரசியல்வாதிகளுடைய கருத்தாகவும் விமர்சனமாகவும் இருக்கின்றது. சில்லறைத்தனமான அரசியல்வாதிகள் எங்கள் மக்களை குழப்புகின்ற வகையில்தான் பல்வேறு கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

கேள்வி – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரிலே இலங்கைக்கான கால அவகாசத்தினை வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கின்றீர்களா அல்லது வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கின்றீர்களா?

பதில் – இந்தக் கேள்வியில் உள்ள இந்தச் சொல்லை முதல் திருத்துமாறு நான் இந்த ஊடகவியலாளர்களையும், மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொள்கின்றேன்.

அது கால அவகாசம் அல்ல. அது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை மேலான கண்காணிப்பிற்கான காலமே தவிர, அது கால அவகாசம் அல்ல. இதிலிருந்து இலங்கை விலகிப்போகுமாகவிருந்தால் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாதவொரு நிலைப்பாடு ஏற்படும். இந்த யுத்தக் குற்றம் அதனுடைய குற்றவாளிகள், ஏற்பட்ட அழிவுகள் இவற்றுக்காகப் பதில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு நிலை உருவாகுமே என்ற அந்த கண்காணிப்புக் காலமே தவிர அது கால அவகாசம் அல்ல.

கேள்வி – ஆனால் 16.03.2019 அன்று நடைபெறும் பாரிய கவனயீர்ப்புப் பேரணியிலும், இதற்கு முன்னர் நடைபெற்ற பேரணிகளிலும், கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் மக்களுடைய குரலாக ஒலிப்பது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான கால அவகாசத்தை வழங்கக்கூடாது என்பதாகத்தான் இருக்கின்றது. அது மக்களுடைய பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்களோ அதைத்தானே நீங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

பதில் – மக்களை பிழையான முறையிலே வழிநடத்துகின்றார்கள். அவர்களுக்கு பிழையான கருத்துருவம் கூறப்படுகின்றது. ஆனால் இந்த புத்தி ஜீவிகளுக்கு நன்றாகத் தெரியும் அது கால அவகாசம் அல்ல கண்காணிப்பிற்கான காலம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!