அதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி

வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவான விடயமல்ல என்றும் அதற்கு 6.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர.

கண்டியில், நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

”சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 3.1 மில்லியன் வாக்குகள் போதுமானதல்ல.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 1.4 மில்லியன் வாக்குகளும் சேர வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தால், 4.5 மில்லியன் வாக்குகளைப் பெற முடியும்.

ஆனாலும் வெற்றி பெறுவதற்கு 6.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும்.

சிறிலங்கா பொதுஜன முன்னணி தனியாக வேட்பாளரை நிறுத்தினால், வெற்றி பெறுவதற்கு மேலும் 2.6 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும்.

இரண்டு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தினால், மற்றொரு கட்சியே வெற்றியைப் பெறும். இரு தரப்புகளுக்கும் தோல்வி தான் எஞ்சும்.

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பாக, இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!