புதிய பிரேரணையை நீர்த்துப்போக வைக்க இடமளிக்கக் கூடாது! – பிரிட்டனிடம் கோரியது கூட்டமைப்பு.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக இலண்டனில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியைச் சந்தித்து கூட்டமைப்பின் நன்றியைத் தெரிவித்தார். கூட்டமைப்பின் இலண்டன் பிரிவுத் தலைவர் ஆர்.டி.இரத்தினசிங்கம், வண.பிதா எஸ்.ஜே.இம்மானுவேல் ஆகியோருடன் சென்ற சுமந்திரன் எம்.பி. அங்கு பிரிட்டனின் தெற்காசியப் பிரிவுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரியான பேர்குஸ் ஒல்டை கடந்த வெள்ளியன்று சந்தித்தார்.

அச்சமயமே மேற்படி புதிய பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காகக் கூட்டமைப்பின் நன்றியைப் பிரிட்டனுக்குத் தெரியப்படுதினார். ஏற்கனவே இலங்கை தொடர்பாக 2015இல் இலங்கையும் சேர்ந்து ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றுவதற்குத் திட்டவட்டமான காலவரையறைகளை விதிக்க வேண்டும் எனவும், புதிய பிரேரணையை இலங்கை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது எனவும் இந்த மூவர் குழு பிரிட்டன் தரப்பை வலியுறுத்தியது எனவும் அறியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!