பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் தீர்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

இலங்கை அரசாங்கம், கடமைக்காவே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புகளைப் பேணுகிறதே தவிர, பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் நேற்று மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

”குற்றவியல் பொறுப்புக்கூறலை கோரி போராடி வரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இலங்கையின் பிரதமர் அக்குற்றங்களை மன்னித்து மறந்துவிடுமாறு வெளிப்படையாகக் கோரியுள்ளார். இலங்கை அரசின் உயர் மட்ட தலைவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஒருமனதாக நிராகரித்து வரும் நிலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இந்த அடிப்படை அபிலாசையை நிறைவேற்ற முடியாது என தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் அல்லது இலங்கைக்கான விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குற்றவியல் நீதியை நிலை நாட்டலாம் என்பதை ஆணையாளர் ஏற்றுக் கொள்வாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!