இளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி

கொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால் இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் தெரிவித்தனர்.

2008-09 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான, அதன் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இதன்போதே, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா, முன்னாள் கடற்படை புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆனந்த குருகே உள்ளிட்ட கடற்படை உயர்மட்டத்துக்கு இந்தக் கடத்தல்கள் குறித்து தெரியும் என்று விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக கூறினார்.

மேலும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள, சந்தேக நபரை தொடர்ந்தும் ஏப்ரல் 4ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!