புலிகளின் ஆயுதங்கள் விற்பனை – 12 பேர் மீது பயங்கரவாத தடைச் சட்டம்!

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, தெற்கிலுள்ள பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணைகளின் போது, தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த கொலை சதி குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடி கண்டுப்பிடித்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் தடுப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!