சர்வதேச ஆசிரியர் விருது யாருக்குத் தெரியுமா ?

இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தட்டிச்சென்றுள்ளார்.

டுபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5 ஆவது முறையாக வருடாந்த சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று தடுபாயில் நடைபெற்றது.

இதனை ஹொலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார்.

சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த 36 வயதுடைய பீற்றர் தபசி என்ற ஆசிரியர் தட்டிச்சென்றார்.

இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பாடசாலையில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர் ஆவார்.

இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே கல்விகற்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச விருதை வென்றமை குறித்து ஆசிரியர் பீற்றர் கூறுகையில்,

ஆபிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கத்தையும், புதிய அத்தியாயத்தையும் சந்திக்கிறோம். இப்போது நான் பெற்ற விருது எனக்கானது அல்ல. எனது நாட்டின் மாணவர்களுக்கானது. என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன்.

இந்த விருது அவர்கள் மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும். சர்வதேச அளவில் 10 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை பெற்றுள்ளேன். இதுவே மிகப்பெரும் உத்வேகம் தருகிறது எனத் தெரிவித்தார்.

சர்வதேச ஆசிரியர் விருதுக்காக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஆசிரியையான யசோதையும் 10 ஆசிரியர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!