கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ; டக்ளஸ்

ஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைசார் நியாயங்கள் என்பவற்றோடு தொடர்புபட்ட அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடியே பொதுத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்மானங்களையும், செயற்பாடுகளையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்த்தும், விமர்சித்தும் வருகின்ற நிலையில், பாராளுமன்ற அங்கத்துவத்தை மட்டும் கணக்கிட்டு, அதில் தமது அரசியல் நலன்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மட்டும் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கு ஏற்புடையதற்ற தீர்வை திணிக்க முடியுமென தென் இலங்கை அரசுகள் முயற்சிப்பார்களேயானால் அது ஒருபோதும் வெற்றியளிக்காது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், உரிமைக்கான நியாயத்தையும் தமது சுய லாப அரசியல் நலன்களுக்காக காட்டிக்கொடுத்துள்ளதுடன், அரசின் அடிவருடியாக மாறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனியும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதை தென் இலங்கை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் மக்களிடையே இருக்கும் பல்கட்சி ஜனநாயக செயற்பாட்டை அரசும், சர்வதேச சமூகமும் மதித்துச் செயற்படாமல், மனித உரிமைகள் தொடர்பாகவும், நிலைமாறுகால நீதி தொடர்பாகவும் குரல்கொடுப்பதும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்தராது.

அனைத்துத் தமிழ் கட்சிகளுடனும் கலந்துரையாடி பொதுத் தீர்மானமொன்று ஏற்படுத்தப்படாமல், தமிழ் மக்கள் மீது வலுவான உள்ளடக்கமற்ற பொதிகளை திணிக்க முற்பட்டால், அத்தகைய செயற்பாட்டை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்த்து நிராகரிக்கும் அவசியம் ஏற்படும் என்பதையும் பதிவு செய்ய விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!