மனைவியின் வேட்புமனு தாக்கலுக்கு எம்.ஜி.ஆர். வேடத்தில் வந்த கணவர்..!

தமிழகத்தின் ஓசூர் சட்டசபை இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் பெண் ஒருவரின் வேட்புமனு தாக்கலுக்கு, அ.தி.மு.க உறுப்பினரான அவருடைய கணவர், எம்ஜிஆர் வேடத்தில் வந்து அசத்தினார்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் எழுவப்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னையா (55); இவரது மனைவி ரத்தினம்மா (45). இவர்கள், 1977ம் ஆண்டு முதல் அ.தி.மு.க-வில் உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் சின்னையா, எம்.ஜி.ஆர் வேடம் அணிந்து அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பது வழக்கம். அதனால் இவரை, ‘ஓசூர் எம்.ஜி.ஆர்’ என அ.தி.மு.க-வினர் அழைக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, எம்.ஜி.ஆர் வேடமணிந்து சின்னையா பிரச்சாரம் செய்தார். அதேபோல், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த மாஜி அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டிக்கு ஆதரவாக, கிராமம் தோறும் எம்.ஜி.ஆர் வேடத்தில் சென்று பிரச்சாரம் செய்தார் சின்னையா.

இந்நிலையில், தற்போது நடக்க உள்ள ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தன் மனைவி ரத்தினம்மாவை சுயேச்சை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார் சின்னையா. நேற்று (26ம் திகதி) காலை நடந்த ரத்தினம்மாவின் ‍வேட்புமனு தாக்கலின்போது, கறுப்பு கண்ணாடி மற்றும் வெள்ளை நிற குல்லா அணிந்து, எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்தார் சின்னையா. அவரை, வழி நெடுகிலும் நின்ற மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!