தாதியின் கவனயீனத்தால் குழந்தை பலி!

இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தாதியொருவர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரச்சினை எதுவும் இல்லை என கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

இது போன்ற கொடூர நிலைமை தான் இங்கு ஒரு தாயிற்கு ஏற்பட்டுள்ளது. பிரசவத்தின் போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை பிரசவித்துள்ளது.

கடலூர் கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொம்மி. இவர் கருவுற்று வளைகாப்பு கூட சமீபத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் பொம்மிக்கு கடந்த மார்ச் 20 ஆம் திகதி அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இவர் அழைத்து செல்லப்பட்டார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாலை வேளையில் வைத்தியர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த தாதியர்கள் பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். ஆரம்பத்தில் குழந்தை சுக பிரசவமாக வந்து விடும் என வெளியில் உள்ள உறவினர்களுக்கு சொல்லி சென்றுள்ளார்.

சுக பிரசவம் என்கிற மட்டற்ற மகிழ்ச்சியோடு வெளியில் காத்திருந்த உறவினர்களுக்கு அடுத்த சில மணித்துளிகளில் இடி வந்து விழுந்தது.

தாதியர் ஒருவர் குழந்தையின் தலை மட்டும் வெளியில் துண்டாக வந்து விட்டது என அலறி அடித்து கொண்டு சென்று தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட உறவினர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த பின்னர் அப்பெண்ணை செங்கல்பட்டு அரசு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்தியர்கள் குழந்தையின் மீதி உடலை பல நேர போராட்டத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

குழந்தை 2 நாட்களுக்கு முன்னரே வயிற்றில் இறந்து விட்டதாக செங்கல்பட்டு அரச வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையை வெளியில் எடுத்த போது அதன் முழு உடலும் சுமார் 1.5 கிலோ மட்டுமே இருந்ததால், குழந்தை முன்னதாகவே இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இருப்பினும் இதை பற்றிய தெளிவான அறிக்கை பிரேத பரிசோதனைக்கு பின் தெரியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை பிரசவம் பார்த்த தாதியர்கள் குழந்தையின் தலையை வெளியில் எடுக்கும் போது இடுக்கியை வைத்து இழுத்ததாக அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் தான் குறித்த விபரீத நிலை குழந்தைக்கு நேர்ந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!