தேர்தலை பிற்போடமால் விரைவாக நடத்துங்கள் – நிமல் சிறிபாலடி சில்வா

தேர்தலை பிற்போடாமல் விரைவாக நடத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் தேவை குறிப்பிட்ட கட்சி தலைவர்களுக்கே இருக்கின்றன. மக்களுக்கு அவ்வாறான தேவையில்லை.

கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியாமலே நிறைவேற்று ஜனாதிபதி முறையில் இருக்கும் பிரச்சினையை தீர்க்க முற்படுகின்றனர். மக்கள் அபிப்பிராயத்துக்கு சென்றால் மக்களின் தீர்ப்பை கண்டுகொள்ளலாம்.

தேர்தல் பிற்படுத்தப்படுவதற்கு எங்களை குறைகூறவேண்டாம். தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்திற்கமைய நாங்கள் பிரதேச சபை தேர்தலை தொகுதி அடிப்படையில் நடத்த நடவடிக்கை எடுத்தோம்.

தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை முறைமை பிழையாக இருக்குமானால், இதனை நிராகரித்து அரசாங்கம் புதிய முறையொன்றை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக காலம் கடத்தி மேலும் தேர்தலை பிற்படுத்தாமல் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!