சம்பிக்க, வஜிரவின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வி!

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும், அமைச்சர் வஜிர அபேவர்தனவின் உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் நேற்று உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவதம் முடிவடைந்து அமைச்சுக்கள் மீதான செலவுத் தலைப்புக்கள் நிறைவேற்றப்பட சபாநாயகர் கோரிய நிலையில் உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 260 ஆவது செலவுத் தலைப்பின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வாக்கெடுப்பை கோரினார்.

வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் சார்பில் விவாதத்துக்கான அமைச்சுக்களின் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட மிகக் குறைந்த அளவிலான எம்.பிக்களே ஆளும் கட்சி தரப்பில் இருந்தனர்.

இதனை அடுத்து வாக்கெடுப்புக்கான கோரம் மணி அடிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில் வாக்கெடுப்பில் அமைச்சின் 260 ஆவது செலவுத் தலைப்பிற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் பதிவாகி அமைச்சின் 260 ஆவது செலவுத்தலைப்பு தோற்கடிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!