சிறிலங்கா படைகளை ஓரம்கட்ட முனையும் வேளை முக்கியமான திருப்பம் – அட்மிரல் கரன்னகொட

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில், சிறிலங்கா படையினருடன் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய- சிறிலங்கா படைகளுக்கிடையில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சிறிலங்காவை ஒரு முக்கியமான பாதுகாப்புப் பங்காளராக அவுஸ்ரேலியா அங்கீகரித்துள்ளது.

அண்மையில் அவுஸ்ரேலிய- சிறிலங்கா இராணுவப் பயிற்சிகள் அத்தகைய உறவுகளின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளன.

அனைத்துலக கப்பல் பாதையில், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் ஆற்றிய பங்களிப்புக்காக சிறிலங்கா கடற்படை பெருமைப்பட முடியும்.

ஆட்கடத்தல்களை முறியடிக்கும் அவுஸ்ரேலியாவின் முயற்சிகளுக்கு சிறிலங்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது.

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில், சிறிலங்கா படையினருடன் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!