அட்மிரல் கரன்னகொடவிடம் இதுவரை 25 மணி நேரம் விசாரணை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் நேற்று நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான அட்மிரல் வசந்த கரன்னகொட 8 மணி நேர விசாரணைகளுக்குப் பின்னர், அங்கிருந்து வெளியேறினார்.

இதுவரை, அவரிடம் 25 மணிநேரத்துக்கு மேலாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம் நடத்தப்பட்ட கடைசி விசாரணை இதுவே என்று கூறப்படுகிறது.

அவரிடம் மேலதிக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் எனவே அவரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்படாது என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அட்மிரல் கரன்னகொடவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!