பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் நாடுகளை ஒரே விதமாகவே இலங்கை நோக்குகின்றது :ரணில் விக்கிரமசிங்க

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர நிலையமாக அமைந்திருக்கின்ற இலங்கை மீது இராணுவ வியூகங்கள் அமைப்பதை நோக்காகக் கொண்டு எந்தவொரு நாடும் செயற்படவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்தந்த நாடுகளுக்குள் போட்டித்தன்மை இருப்பினும் கூட, அனைத்து நாடுகளுடன் ஒரே விதமான நட்புறவைப் பேணுவதே எமது கொள்கையாகும். அந்தவகையில் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சுதந்திர கடல்சார் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இன்னும் 20 வருடங்களில் உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக ஆசியப் பிராந்தியம் மாறும். எனவே அதனை இலக்காகக் கொண்டு பிராந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் மற்றும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு ஆகியவற்றின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டின் மூலம் வெவ்வேறான கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் கொண்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடுவதற்கும், தமது கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் விக்கிரமசிங்க, ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான அரசியலமைப்பு காணப்படுகின்றது. அவற்றை மாற்றியமைக்க முடியாது. ஆனால் இம்மாநாட்டின் ஊடாக அத்தகைய வேறுபாடுகளைக் களைந்து, பிராந்தியத்தின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்றும் கூறினார்.

மேலும் ஆசியப் பிராந்தியத்தில் முதியோர் சனத்தொகை அதிகமாக உள்ள நிலையில், இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் ‘அதிகரித்துவரும் வயதான சனத்தொகையினரின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்வாய்ப்பு சார்ந்த சவால்கள்” குறித்து கலந்துரையாடுவதன் மூலம், அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டடைய முடியும். அத்தோடு ஆசிய மற்றும் ஐரோப்பிய பிராந்திய நாடுகளுக்கு இடையிலான சமூக, பொருளாதார ரீதியான ஒத்துழைப்பினையும், இணக்கப்பாட்டையும் கட்டியெழுப்பிக் கொள்வது அவசியமாகும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!