சிறிலங்கா படையினருக்கு மேலதிக பயிற்சி வாய்ப்பு – இந்தியாவிடம் கோரினார் மைத்திரி

சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்ஜய் மித்ராவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை வந்தடைந்த இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்ஜய் மித்ரா நேற்றுக் காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கும், ஆட்கடத்தலுக்கும் எதிராக கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினருக்கு இந்தியா அளித்து வருகின்ற பயிற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தகைய பயிற்சி வாய்ப்புகளை இன்னும் விரிவான முறையிலும், அதிகரிப்பதற்கும் வழி செய்யுமாறும் இந்திய பாதுகாப்பு செயலரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டது.

எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இருநாடுகளின் பாதுகாப்புச் செயலர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்களை நடத்தவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!