கோத்தாவுக்கு எதிரான வழக்கு – உறுதிப்படுத்தினார் பீரிஸ்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் அகிம்சா விக்ரமதுங்கவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் நெற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர்,

“இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்று கருதப்படும் பின்னணியிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிடும் கோத்தாபய ராஜபக்சவின் முடிவுக்கு தடையை ஏற்படுத்தவே, அவருக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

லசந்த விக்ரமதுங்க 2009 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பின்னர் அவர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சென்று வந்திருந்த போதும், இப்போதே அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!