பழி வாங்க வேண்டிய அரசியல்வாதியை கொன்றுவிடும் கலாசாரம் முன்பு காணப்பட்டது – பந்துல குணவர்தன

அரசியல்வாதிகளைப் பழிவாங்குவது எனின் இரண்டு முறைகள் இருக்கின்றன.பழி வாங்க வேண்டிய அரசியல்வாதியை கொன்றுவிடுகின்ற கலாசாரமொன்று முன்பு காணப்பட்டது. தற்போது அவ்வாறன்றி,அந்த அரசியல்வாதியின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அந்த நபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள்.

அதேபோன்று தான் அரசிநிதி பற்றிய குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு முற்பட்ட போது, நான் தனியார் வங்கியொன்றில் கடன்பெற்று, அதனை இன்னமும் மீளச்செலுத்தவில்லை என்று பொய்யான குற்றாச்சாட்டுக்களை என்மீது முன்வைக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஸ்ரம விகாரையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் இவ்வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 5 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் அதில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. நாம் வரவு – செலவுத்திட்ட விவாதத்திற்கு முன்பதாகவே கடந்த ஆண்டிற்கான மத்திய வங்கியின் அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குப் பெற்றுத்தருமாறு கோரியிருந்தோம். எனினும் அவர்கள் மத்திய வங்கியின் ஆண்டறிக்கையைப் பெற்றுத்தருவதனைத் திட்டமிட்டு தாமதப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதேபோன்று வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்குள் அரச நிதி பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எனினும் அதனைச் சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் காணப்பட்டது. அதுகுறித்து பாராளுமன்றத்தில் நான் வினவிய போது, நான் அரச நிதி பற்றிய குழுவின் அமர்வுகளுக்கு ஒழுங்காகச் சமுகமளிப்பதில்லை என்று குற்றம் சுமத்துகின்றார்கள்.

ஆரம்பத்தில் அரச நிதி பற்றிய குழுவின் உறுப்பினர் என்ற வகையில், அறிக்கையைத் தயாரிப்பதற்கு உதவி பெறக்கூடியவர்களின் பெயர்களை நானே பரிந்துரை செய்திருக்கின்றேன். எனினும் அக்குழுவின் செயற்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே பின்னர் அரச நிதி பற்றிய குழு அமர்வுகளில் கலந்துகொள்வதில்லையென அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!