தேர்தலுக்கு அஞ்சுகிறது அரசாங்கம்!

தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் வெற்றிபெற முடியாது போகும் என்ற காரணத்தினாலேயே அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் அச்சமடைகின்றது. தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் வெற்றிபெற முடியாது போகும் என அரசாங்கம் பயப்படுகின்றது.இதன் காரணமாக தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது. சில மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடக்கின்றது. இந்நிலையில், விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, ஏனைய பல்வேறு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளன. எனினும், தமது தோல்வி பயத்தின் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருகின்றது. மாகாண சபைகளை இல்லாமலாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது.

அது அரசியல் சாசனத்தின் சட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். இந்நிலையில், தேர்தலை காலம் தாழ்த்துவதன் நோக்கம் மாகாண சபைகளை இல்லாமலாக்குவதற்காக இருக்க முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!