பெற்ற பிள்ளைகளை சித்திரவதை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

தங்களது 12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ள நிலையில், பெற்றோர்களை மன்னிப்பதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

57 வயதுடைய டேவிட் எலன் ரப்பின், அவரது மனைவியான 50 வயதுடைய லூஸியஸ் அனா என்ற பெற்றோர்களே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமது பிள்ளைகளை சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 2 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட தங்களது 13 பிள்ளைகளில் 12 பிள்ளைகளை சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரப்பின் தம்பதியரின் 17 வயது பெண் குழந்தை ஒருவர், தனது வீட்டிலிருந்து தப்பித்துச் சென்று அவசர சேவையின் உதவியை நாடியதையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிள்ளைகள், வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு, சங்கிலிகளினால் கட்டப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரப்பின் தம்பதியினர், தங்களது பிள்ளைகளை சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரப்பின் தம்பதியினருக்கு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தங்களது பெற்றோர்களைத் தாங்கள் மன்னிப்பதாக சித்திரவதைகளுக்கும், துஷ்பிரயோகத்திற்கும் உள்ளான அவர்களின் பிள்ளைகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த 13 பிள்ளைகளில், 7 வயது வந்தவர்களையும், 6 சிறுவர்களையும் தாங்கள் பராமரிப்பதாக நாடுமுழுவதுமுள்ள செவிலியர்கள், உளவியலாளர்கள் உட்பட 20 பேர் முன்வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!