புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரிக்கு விடுதலை!

விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு இரகசியங்களை வழங்கினார் என, அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அரச புலனாய்வுத்துறை அதிகாரியான துர்யலாகே தர்மதாச, நேற்று மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டார்.

2007 ம் ஆண்டு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுத்துறை அதிகாரியினால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் 12 சாட்சியங்களை அரச சாட்சிகளாள குறிப்பிட்டு விடுதலைப் புலிகளின் உளவுத்துறைக்கு பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியதுடன் வெடிபொருட்கள், 35 துப்பாக்கிகள் ரவைகள், 8 சைனைட் வில்லைகளை என்பன உடமையில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆராம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் எதிரிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில், இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் எதிரியின் உடமையில் இருந்து RDX 23 கிராம் கைப்பற்றப்பட்டதாக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.ஆனால் அரச சாட்சியான பொலிஸ் அதிகாரியின் சாட்சியத்தில் தான் RDX 23 கிராம் வெடிபொருளை எதிரியின் உடமையிலிருந்து கைப்பற்றியதாக முரணான சாட்சியம் அளித்துள்ளதுடன், 8 சைனைட் வில்லைகளை எதிரியின் உடமையிலிருந்து கைப்பற்றியதாக பொலிஸ் அதிகாரி சாட்சியமளித்துள்ள போதிலும் வழக்கின் சான்றுப் பொருளாக 8 சைனைட் வில்லைகள் அரச தரப்பால் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லையென்று சட்டத்தரணி தனது சமர்ப்பனத்தில நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பயங்கரவாத் தடைப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி தனது சாட்சியத்தில் இந்த வழக்கின் எதிரியான துரயலாகே தர்மதாசாவை 2007ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி பொரளையில் அமைந்துள்ள அரச புலனாய்வுப் பிரிவுக்கு சென்று கைது செய்த தினத்தில் மேலும் 19 சந்தேக நபர்களை கைது செய்து அவர்களின் உடமையிலிருந்து வெடி பொருட்களை கைப்பற்றிதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

ஆனால் குறுக்கு விசாரணையில் கைதிகளின் உடமையிலிருந்து கைப்பற்றி அரச பகுப்பாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட சான்றுப் பொருட்களில் காணப்பட்ட முரண்பாடுகளையும் எதிரியால் வழக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சட்டமா அதிபரினால் புலனாய்வுத் துறை அதிகாரியான துரயலாகே தர்மதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அரச தரப்பினால் வழங்கப்பட்ட சாட்சியத்திலும் மற்றும் சான்றுப் பொருட்களிலும் காணப்பட்டமுரண்பாடுகளை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு எதிரியை விடுதலை செய்ய வேண்டுமென தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.

அரச தரப்பினதும் எதிரிகள் தரப்பினதும் வாதபிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராச்சி இற்றைய தினம் தனது தீர்ப்பில் எதிரிதரப்பு வாதத்தை கவனத்தில் கொண்டு எதிரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க தவறியுள்ளமையால் எதிரியான புலனாய்வுத்துறை அதிகாரியை விடுதலை செய்துள்ளார்.

அரச தரப்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயனா செனவிரத்னவும், எதிரி தரப்பில் சட்டத்தரணி செல்வி தர்மராஜாவின் அணுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா ஆஜராகியிருந்தார்.

இதேவேளை குறித்த புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்ட நாள் முதல் உறவினர்கள் வந்தாலும் இரண்டாவதாக பிறந்த குழந்தையை இப் புலனாய்வு அதிகாரி பார்க்காத நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்ட போதும் அவரை உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை.

இந்நிலையில் விடுதலையான குறித்த புலனாய்வு அதிகாரிக்கு உண்ண உணவும், போக்குவரத்துக்கான செலவுகளையும் ஜனாதிபதியின் சட்டத்தரணி கே.வி தவராசா வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த புலனாய்வு அதிகாரி ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கால்களில் விழுந்து வணங்கி சென்றதாகவும், இந்த சம்பவத்தினை அருகில் இருந்து பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!