என்னை அவதூறு செய்பவர்கள் பாகிஸ்தான் பிரதமரை புகழ்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர்; பிரதமர் மோடி!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 6ந்தேதி பேரணி ஒன்றில் பேசும்பொழுது, மோடியை நாட்டின் பிரதமராக ஏற்று கொள்ளமாட்டேன். அவர் காலாவதியான பிரதமர் என கூறினார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் புதிய பிரதமருடன் பேசுவேன் என அவர் கூறினார். இதுபற்றி, மேற்கு வங்காளத்தின் பங்குரா நகரில் இன்று நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பொதுமக்கள் முன் பேசும்பொழுது, தேசத்தின் தலைவராக நாட்டு பிரதமரை ஏற்க தயார் இல்லை என தீதீ (பானர்ஜி) வெளிப்படையாகவே கூறி வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமரை அந்நாட்டு பிரதமராக ஏற்பது பெருமை அளிக்கிறது என உணருகிறார். பொது தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற வருத்தத்தில் அவர் அரசியலமைப்பினை அவமதிப்பு செய்து வருகிறார் என்று கூறினார்.

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வால் ஒரு பேரணியை கூட நடத்த முடியாத நிலையை ஏற்படுத்த அனைத்து சாத்தியப்படும் முயற்சிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது என என்னிடம் கூறப்பட்டது. மம்தா பானர்ஜி முதலில் மேற்கு வங்காளத்தினை அவரது அரசியலுக்காக அழித்தார். இதன்பின் தனது தொகுதியை தக்க வைக்க அவர் மாநிலத்தினை அழித்து வருகிறார்.

ஏனெனில் நாட்டின் 135 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது என்பதற்காக, என்மேல் பானர்ஜி கோபப்படுவதற்காக நான் கவலைப்படவில்லை. எனினும், மேற்கு வங்காள மக்களுக்காக அவர் அச்சப்பட வேண்டும். சிட்பண்டு ஊழல் மற்றும் மாநிலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் ஆகியவற்றால் மக்கள் அவர் மீது கோபத்திலும், வருத்தத்திலும் உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரசின் ஜனநாயகமற்ற வழிகள் மக்களை ஆத்திரமடைய செய்துள்ளன. எனக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனியுங்கள். எனக்கு எதிராக தகாத வார்த்தைகளை அவர்கள் பேசியது பற்றி மம்தாவுக்கு தெரியாது. தங்களுடைய பிரதமரை அவதூறு செய்வதில் அவர்களுக்கு பிரச்னை இல்லை. அதேவேளையில் பாகிஸ்தான் பிரதமரை புகழ்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!