கொச்சியில் 500 வீடுகளை கொண்ட 5 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்துத் தள்ள உத்தரவு!

கொச்சியின் மரடு நகராட்சி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்-III என அறிவிப்பாணை செய்யப்பட்ட பகுதியில், வணிக அடிப்படையிலான கட்டிடம் கட்ட கடந்த 2006ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. இது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய செயல் என்பதால், அந்த அனுமதியை திரும்பப் பெறுமாறு கேரள அரசு கூறியதைத் தொடர்ந்து, கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து 2015ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது. கேரள அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, வல்லுநர் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1991ஆம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மற்றும் 1996ஆம் ஆண்டு கேரள மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய திட்டம் ஆகியவற்றின்படி, சர்ச்சைக்குரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்ட பகுதி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்-III-ன் கீழ் வருவது வல்லுநர் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆற்றுப் படுகைகளிலும் கடற்கரை மண்டலங்களிலும் கட்டுமானங்களை அனுமதிப்பது, இயற்கைப் பேரழிவுக்கு அழைப்பு விடுப்பது போல அமைந்துவிடும் என்றும், கனமழை-பெருவெள்ளத்தின்போது உத்தரகாண்ட், தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டியும் கேரள அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 500 வீடுகளை கொண்ட 5 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்துத் தள்ளுமாறு உத்தரவிட்டனர்.

கேரள மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வல்லுநர் குழு அறிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. கொச்சி கடற்கரை அருகே கட்டப்பட்டுள்ள 5 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் ஒரு மாதத்திற்குள் இடித்துத் தள்ளி அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, தமிழகத்தில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!