ஊடகங்களின் கழுத்தை நெரிக்கிறது சிறிலங்கா அரசு

சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள் தொடர்பான படங்களை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாலக கலுவெவ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இதுபற்றி அறிவித்துள்ளார்.

இந்தப் படங்களை காணும் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப அஞ்சுகின்றனர் என்பதால், கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகளை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் காவல்துறை ஊடகப் பேச்சாளரின் மூலம் கிடைக்கும் தகவல்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இத்தகைய தேடுதல்களின் போது, ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேடுதல்களை நடத்தும் படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களை அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!