நைஜீரியாவில் ரமலான் நோன்பு காலத்தில் உணவு உண்டதாக 80 பேர் கைது!

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

முதல்முறை கைதானவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. மீண்டும் இதுபோல் செய்து பிடிபட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என ‘ஹிஸ்பா’ போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இத்தகைய நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. பிற மதத்தினரை ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களின்படி ‘ஹிஸ்பா’ போலீசார் தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!