அமைதியைப் பேணுவதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு – மஹிந்த

இலங்கையில் அமைதியைப் பேணுவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பிரதான எதிர்க்கட்சி ஆதரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜேர்மனியிடம் உறுதியளித்திருக்கிறார்.

கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் ஜோன் ரோட் ராஜபக்ஷவை வெள்ளியன்று சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய்ந்தார்.

‘நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினோம். கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஜேர்மன் தூதுவர் கவலை வெளியிட்டார். தற்போதைய நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்” என்று ராஜபக்ஷ விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரென்ற வகையில் நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு முடிவைக்கண்டு சகஜநிலையை ஏற்படுத்துவதற்குத் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிரணி உறுதியளித்திருப்பதாக ராஜபக்ஷ ஜேர்மன் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் இதனையே நாம் கூறியிருக்கின்றோம். வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்து அமைதி காக்குமாறு பொதுமக்களிடம் நாம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையிலுள்ள யுனிசெப் பிரதிநிதி டிம் சட்டெனும் ராஜபக்ஷவை வெள்ளியன்று சந்தித்தார். நாட்டின் நிலைவரம் குறித்து ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய அவர் நாட்டில் வழமை நிலையைக் கொண்டுவரும் முகமாக பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோரை ராஜபக்ஷ ஊக்குவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த ராஜபக்ஷ தான் ஏற்கெனவே அதனைச் செய்திருப்பதாகவும், அரசாங்கத்தின் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்திருப்பதால் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!