இந்திய ஜனாதிபதி என்ன முடிவெடுப்பார்?

இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் புதிய அரசு அமைவதில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றதோ, அந்தக் கட்சியை தான் ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பார். இது தான் இந்திய சட்டரீதியான நடைமுறை. இதற்கு சில முன்னுதாரணங்களும் இருக்கின்றன.

கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் போது எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கும் 197 இடங்களும், வி.பி.சிங்கின் ஜனதா தளத்திற்கு 143 இடங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 85 இடங்களும் கிடைத்தன.

இதனால் அப்போதைய இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் புதிய அரசு அமைக்க காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்திக்கு அழைப்பு விடுத்தார். அவர் பின் வாங்கிவிட்டதால் அடுத்து வி.பி.சிங்கை அழைத்தார்.

அதையேற்று வி.பி.சிங் பாரதிய ஜனதா, இடது சாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார்.

இதேபோல் கடந்த 1996 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் அதிகபட்சமாக 161 இடங்களில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வாஜ்பாய்க்கு புதிய அரசு அமைக்க அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைப்பு விடுத்தார். அந்த நடைமுறையையே தற்பேதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் பின்பற்றுவார் என இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!