எந்த சதித்திட்டத்தினாலும் எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – அமைச்சர் மங்கள சமரவீர

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டதாகும்.

முஸ்லிம் மக்களை எமது அரசாங்கத்தில் இருந்து இல்லாமலாக்குவதற்கான திட்டமாகவே இது அமைந்திருக்கின்றது.

இவர்களின் எந்த சதித்திட்டத்தினாலும் எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலானது சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட தாக்குதலாகும்.இதனை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.என்றாலும் நாட்டில் இருக்கும் பங்குரோத்து அரசியல்வாதிகள் இந்த தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு சிங்கள முஸ்லிம் பிரச்சினையொன்றை ஏற்படுத்தி,அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக காண்பிக்க முயற்சிக்கின்றனர்.

சர்வதேச பயங்கரவாத தாக்குதலானது பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.என்றாலும் எமது நாட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சில வாரங்களில் அதனை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர எமது பாதுகாப்பு பிரிவுக்கு முடியுமாகியுள்ளது.

அதற்கு எமது நாட்டு முஸ்லிம் மக்களின் 90 வீதமானவர்களின் பூரண ஆதரவு இருந்தமைய காரணமாகும்.அதற்கு நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.என்றாலும் மஹசோன் பலகாய போன்ற இனவாத அமைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமற்றதாக்க முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி இருந்தது.

முஸ்லிம் மக்கள் எமது அரசாங்கத்துடன் இருக்கின்றனர். அவர்களை தூரப்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். இவர்களின் எந்த சதித்திட்டத்தினாலும் இலங்கை மக்கள் எம்முடன் இருக்கும்வரை எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!