மோடியின் உத்தியைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஐதேக வியூகம்!

இந்திய பிரதமர் தேர்தலில் வெற்றிபெற கையாண்ட விதத்தையே ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் பின்னணியே முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

‘இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தெரிவாகியுள்ளார் . இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொது மக்களை பிளவுபடுத்தியே இந்த தேர்தல் வெற்றியை அவர் பெற்றுக்கொண்டிருக்கின்றார். அதாவது இந்தியாவில் இந்து, முஸ்லிம் மக்கள் பாரியளவில் இருந்து வருகின்றனர். இந்த மக்களை பிளவுபடுத்தியே மோடி தேர்தலில் வெற்றிபெற்றார். இந்து முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் மோடி வெற்றிபெற்றிருக்கமாட்டார்.

அத்துடன் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க சார்பான கொள்கையுடையவர். அவருடைய பொருளாதார கொள்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் உயர் நிலையில் இருப்பவர்களுடனே மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவுடனே அவருடைய நட்புறவு இருந்து வருகின்றது. மோடி ஒரு அமெரிக்க ஆதரவாளர். அதனால் அவரின் தேர்தல் வெற்றி புதுமையாகவே இருக்கின்றது.

ஏனெனில் அந்த நாட்டில் நீண்டகாலமாக பொது மக்கள் பக்கம் இருந்துவந்த பலவீனம் மற்றும் தொழிலற்றவர்களின் வீத அதிகரிப்பு. இவ்வாறான நிலையில் மோடியின் வெற்றி பாரிய வியாபாரிகளின் பணம் மற்றும் இந்து, முஸ்லிம் பிளவு ஆகிய இரண்டிலுமே இடம்பெற்றது.

அத்துடன் இந்து, முஸ்லிம் பிளவை ஏற்படுத்தியே மோடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கின்றார். இது அரசியலமைப்புக்கு முரண். அதனால் இதனை நிறுத்தவேண்டும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழு செய்யவில்லை. இதுதான் நாங்கள் கற்றுக்கொள்ள இருக்கும் பாடமாகும். அத்துடன் இனங்களுக்கிடையில் பிளவை தூண்டினால் அதன் மூலம் ஏற்படுவது ஏகாதிபத்திய வாதமாகும்.

அதனால் இலங்கையில் இருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இலங்கையர்கள் என்றவகையில் தேசியவாதத்தை அடிப்படையாக கொண்டு ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட முடியும். அவ்வாறான ஒன்றுதிரட்டல் மூலமாகவே இலங்கையில் இலங்கை தேசத்தவர்கள் உருவாகும். ஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சி அதிகாரம் காரணமாக இலங்கையில் தேசியவாதம் ஏற்படாது.

அதனால் இந்திய பிரதமர் செயற்பட்டதுபோல் ஐக்கிய தேசிய கட்சி சிங்கள, முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தி அரசியலமைப்புக்கு முரணாக செயற்படவே முயற்சிக்கின்றது. அதனால் இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு இதற்கு எதிராக பொதுஜன பெரமுன மக்களை தேர்தல் ஒன்றுக்காக அணிதிரட்டவேண்டும். ஆனால் அதனைமேற்கொள்ள பொதுஜன பெரமுனவுக்கு இன்னும் முடியாமல்போயுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!