பிரேசிலில் பயங்கரம்: சிறையில் கைதிகளிடையே மோதல்; 15 பேர் உயிரிழப்பு!

பிரேசில் உலகிலேயே அதிக சிறைக்கைதிகளை கொண்ட 3-வது நாடாக திகழ்கிறது. கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 1,12,305 கைதிகள் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரேசில் சிறைகளில் கைதிகளுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரங்கள் மூள்வதும், சிறையை தகர்த்து தப்பி ஓடும் முயற்சிகளும் அவ்வப்போது நடக்கின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அமேசோனஸ் மாகாணத்தின் தலைநகர் மனாவுசில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கு இடையே பெரும் கலவரம் வெடித்தது.

உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் பார்வை நேரத்தின்போது, இரு தரப்பு கைதிகள் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்புக்கும் ஆதரவாக ஏராளமான கைதிகள் திரண்டதால் கைகலப்பு, பெரும் கலவரமாக மாறியது. பல் துலக்கும் ‘டூத்பிரஸ்’, சாப்பிடும் தட்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் சிறையில் பதற்றமான சூழல் உருவானது. கைதிகளை பார்க்க வந்திருந்தவர்கள் மத்தியில், பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.

இதையடுத்து, சிறைக்காவலர்கள் அவர்கள் அனைவரையும் பத்திரமாக சிறையில் இருந்து வெளியேற்றினர். அதனை தொடர்ந்து, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால் கைதிகள் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, கலவர தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நீண்ட நேரம் போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் முன்னதாக இந்த கலவரத்தில் 15 கைதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே சிறையில் கைதிகளுக்கு இடையே சுமார் 20 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற பயங்கர மோதலில் 56 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!