தேசிய பாதுகாப்புக்கு அதிகாரத்தை ஜனாதிபதி முழுமையாக பயன்படுத்த வேண்டும் – தேசிய முன்னணி வேண்டுகோள்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக செயற்படுத்த வேண்டும்.கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவினரை தேசிய பாதுகாப்பு கருதி விடுவித்தலை செய்வது அவசியமாகும் என்று தொழில்சார் நிபுணர்களின் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்ட்டது.

முன்னணியின் உபசெயலாளர் வைத்தியர் சமன்த ஆனந்த தெரிவித்ததாவது ,

தற்போது நாடு எதிர்நோக்கும் பாதுகாப்பு நெருக்கடி தொடர்பில் உறுதியானதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க இயலாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. கடந்த மாதம் இடம் பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் காரணமாக பெருமளவிலானோர் உயிரிழந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் இத்தகைய அழிவினால் நாட்டிற்காக போராடி உயிர்தியாகத்தின் ஊடாக பாதுகாப்பு தரப்பினர் எமக்கு பெற்றுத்தந்த அமைத்திக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் உயிர்தியாகத்தினால் பெற்றுத்தந்த சுதந்திரம் அரசாங்க தலைவர்களின் செயற்பாடுகளினால் அழிக்கப்பட்டு தற்போதைய பாதுகாப்பு நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளது. ஏனைய உலக நாடுகளை நோக்கும் போது தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றனர். எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலை இன்மையாலேயே பாதுகாப்பு நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!