சூடானில் சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய ஸ்டிரைக்- விமானங்கள் ரத்து!

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் கடந்த மாதம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி 48 மணிநேர பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். துறைமுகங்கள், எண்ணெய் வயல் சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. கர்த்தூம் விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஊழியர்கள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!