இரத்த ஆறு ஓடும், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்று எச்சரித்தது உண்மையே!- ஹிஸ்புல்லா

வடக்கு,கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முற்பட்டால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று தான் பேசியது உண்மைதான் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுபல சேனாவின் இன ரீதியான முரண்பாடுகளை அரசு தடுத்து நிறுத்த தவறினால் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்குவார்கள் என தான் கூறியதும் உண்மையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை நாடாளுமன்றில் கூறவில்லை. வடக்கு கிழக்கை இணைக்க இந்த அரசாங்கத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் இருக்கவேண்டும். ஆனால் இரு சமூகமும் ஒன்றுபட்டு வாழ்வோம். இரு மாகாணங்களையும் இணைக்க அரசு முயன்றால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினேன். தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த கருத்தையும் நான் நாடாளுமன்றில் கூறவில்லை.

பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களையும் தாக்க முற்படும்போது அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நிறுத்தாமல் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைந்தால் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவார்கள். அந்த சூழ்நிலைக்கு இடமளிக்கக்கூடாது என கூறியிருந்தேன். இது ஒரு பௌத்த நாடு. எனவேதான் இத்தகைய இனவாதத்துக்கு இடமளித்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள் என்று கூறியிருந்தேன். மாறாக எதனையும் கூறவில்லை

பயங்கரவாதியான சஹ் ரான் என்பவர் தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்காக மிக மோசமாக செயற்பட்டவர். என்னை தோற்கடித்து எனது அரசியல் வாழ்வை நிர்மூலமாக்க தீவிரமாக செயற்பட்ட ஒருவர். இவர் சுயேச்சைக் குழுவொன்றைப் பயன்படுத்தி மேடைகளில் ஏறி காத்தான்குடி முழுவதும் எனக்கு எதிராக பிரசாரம் செய்தார். முஸ்லிம்களில் பல குழுக்கள் உண்டு. அதில் ஒரு குழு மதம் மாறியவர்கள். அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளி யேறியவர்கள். அக்குழுவினரோடு என்னை தொடர்புபடுத்தி இவனுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது வாக்க ளிப்பது ஹராம் என்று மேடை மேடையாக பிரசாரம் செய்தார்.

இதனால் கடந்த பொதுத் தேர்தலில் நான் 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டேன். இவ்வாறு எனக்கு எதிரான பொய்யான பிரசாரங்களை மேற்படி குழுவினர் மேற்கொண்டதன் காரணமாக எனக்கு ஆதரவான 2 ஆயிரம் வாக்குகளை அந்த தேர்தலில் இல்லாமல் ஆக்கினர். இவ்வாறான நிலையில் எனக்கும் தற்கொலை குண்டுதாரி களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!