முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் நாடகமா? – அதிபருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் கடிதங்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து எழுந்த அச்சமான சூழ்நிலையை அடுத்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ஹலீம், றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான, ஹரீஸ், அமீர் அலி, அலி சாஹிர் மௌலானா, பைசல் காசிம், மற்றும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் கூட்டாக பதவி விலகுவதாக அறிவித்தனர்.

எனினும், அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக நேற்று வரை எந்த ஆவணமும், அதிபர் செயலகத்துக்கு கிடைக்கவில்லை என்று அதிபர் செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிபரின் செயலரும் உறுதிப்படுத்தினார்

முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் பதவி விலகல் கடிதங்களை இன்னமும் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கவில்லை என, அதிபரின் செயலர் உதய செனிவிரத்னவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் பதவி விலகுவதாயின் அதற்கான கடிதங்களை சிறிலங்கா அதிபரிடமே கையளிக்க வேண்டும் என்றும், அதனை அதிபர் ஏற்றுக் கொண்டால், அதுபற்றிய அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

வாகனங்களும் ஒப்படைக்கப்படவில்லை

பதவி விலகியுள்ளதாக அறிவித்த அமைச்சர்கள் எவரும் இன்னமும், அவர்களது அதிகாரபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை.

அவர்களின் தனிப்பட்ட பணியாளர்களும் பதவி விலகலை அறிவிக்கவில்லை.

அமைச்சர்கள் முன்னர் பெற்றிருந்த பாதுகாப்பு வசதிகளுடனேயே இன்னமும் பயணித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்பு கொள்ளும் முயற்சி தோல்வி

இதுதொடர்பாக, அமைச்சர் பதவியில் இருந்து விலகிய கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ஹலீம், றிசாத் பதியுதீன் ஆகியோருடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பைசல் காசிமுடன் கொழும்பு ஆங்கில நாளிதழ் தொடர்பு கொண்டு, கேட்டபோது, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், 3ஆம் நாளே பதவி விலகல் கடிதங்களை கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

தொடர்பை துண்டித்த பைசல் காசிம்

யாரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டன, அதிகாரபூர்வ வாகனங்களை ஏன் ஒப்படைக்கவில்லை என்று கேள்வி எழுப்ப முயற்சித்த போது, அவர் தொடர்பை துண்டித்து விட்டார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலர்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகளும் பயனளிக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செயலருக்கு தெரியாது

எனினும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது பதவி விலகல் தொடர்பாக, தனது அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்று அவர் பதவி வகித்த நகர திட்டமிடல், நீர் விநியோக, உயர் கல்வி, அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நீக்கப்படவில்லை

பதவி விலகுவதாக அறிவித்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் ஆகியோருக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்ந்தும் அளிக்கப்படுவதாக, அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், கபீர் ஹாசிம் ஆகியோருக்கு சிறப்பு அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக , 10 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் உள்ளனர். ஏனைய அமைச்சர்களுக்கு 6 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக, இன்று நடக்கும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலருடன் கலந்துரையாடுவோம்” என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் முன்வரிசை ஆசனங்கள்

பதவி விலகிய அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், கபீர் ஹாசிம் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் முன்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையில் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஆகியோருக்கும், ஐதேக தவிசாளர் என்ற முறையில், கபீர் ஹாசிமுக்கும் இந்த ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அவை முதல்வர் செயலக தகவல்கள் கூறுகின்றன.

பதவி விலகிய ஏனைய அமைச்சர்களுக்கு, பின்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சி போர்க்கொடி

கட்சித் தலைவர்களுக்கு முன்வரிசை ஆசனம் என்றால், உதய கம்மன்பில, சந்திரசிறி கஜதீர, ராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் ஆகியோருக்கும் முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் முறையிட்டுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் ஒரு நாடகமே என்றும், கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!