அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் கூடுதல் பயிற்சி வாய்ப்புகள் குறித்து பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல், இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்கும், கண்ணிவெடிகளை அகற்றும் பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த ஜூன் 2ஆம் நாள் சிறிலங்கா வந்த கிளார்க் கூப்பர், கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் அவர், கிழக்கில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன், மக் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.

கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் அதில் எதிர்கொள்ளப்படும் இடர்களையும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகத்துக்குச் சென்ற அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் கூப்பர், கிழக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் மெரின் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றது.

இந்தச் சந்திப்பின் போது, சுதந்திரமான திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கு ஆதரவாக, அமெரிக்க கடற்படையுடன், இணைந்து இன்னும் அதிகமான பயிற்சிகள் மற்றும் கூட்டு ஒத்திகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கிளார்க் கூப்பர், தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!