பதவியைத் துறந்த சம்பந்தன் பதவி மோகத்தில் இருப்பதை நினைத்து வேதனைப்படுறேன் – ஆனந்தசங்கரி

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டைக் கண்டித்து பதவியை துறந்த சம்பந்தனா இன்று பதவி மோகத்திற்கு அடிமையாகியுள்ளார் என்கின்ற போது வேதனையாகவுள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலளார் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் மதம் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும், மற்றும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கும் அரசாங்கத்தை இடித்துரைக்கும் நோக்கத்தில் ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்த முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடு, சரி தவறுகளுக்கு அப்பால், பாராட்டத்தக்கதாகும்.

ஆனால் இதன் விளைவு எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமாக அமையும் என்பதால் இனியாவது சிந்தித்து செயற்படவேண்டும். சிறுபான்மை இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில மததீவிரவாத கும்பலுக்கு இது ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது

2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடன் கள்ளவாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்று பதவி சுகங்களை அனுபவித்து அதன் தொடர்ச்சியாக இன்று வரை பாராளுமன்ற சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் தலைமைகளின் துணிச்சலைக் கண்டு வெட்கித்தலைகுனிய வேண்டும்.

வாக்களித்த மக்களும், கள்ள வாக்குகளுக்கு அபார ஒத்துழைப்பு கொடுத்த விடுதலைப் புலிகளும் கொத்துக் கொத்தாக குண்டுவீச்சில் செத்துக் கொண்டிருந்த போது பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டு வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்டிருந்தார்கள்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் அவர்களின் தொலைபேசி இணைப்புகளையும் செயலிழக்க வைத்துவிட்டு, யுத்தம் முடிந்த பின், யுத்தத்தை முடித்து வைத்தற்கு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிற்கு சம்பந்தன் பாராட்டும் தெரிவித்தார்.

ஆனால் 1983ஆம் ஆண்டு இந்த நாட்டில் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன ஜனநாயகத்திற்கு விரோதமாக மேலும் ஆறு ஆண்டுகள் பாராளுமன்றத்தை நீடித்த போது தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டைக் கண்டித்து நான் உட்பட, பதவிகளைத் துறந்தோம். அதில் சம்பந்தனும் அடங்குவார். அந்த சம்பந்தனா இன்று இப்படி பதவி மோகத்திற்கு அடிமையாகிவிட்டார் என்று எண்ணும் போது வேதனையாக இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் தான் தேசியத் தலைமை என்றும் அவர்கள் தான் ஏகப்பிரதிநிதி என்றும், அவர்கள் பலமாக இருந்த போது துதிபாடித் திரிந்து, அதன் மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்புடன் கள்ள வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற சுகத்தை அனுபவித்துவிட்டு யுத்தம் முடிந்த பின்னர் பாராட்டு தெரிவித்த சம்பந்தரின் செயற்பாட்டோடு இன்றைய முஸ்லிம் தலைமைகளின் செயற்பாட்டை ஒப்பிட்டு பார்த்தால், ஏணிவைத்தால் கூட எட்டிப்பிடிக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் நாட்டின் நிலைமை மிக மோசமடைந்து விட்டது. ஜனாதிபதியும், பிரதமமந்திரியும் முட்டிமோதிக் கொண்டு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக வழமைக்கு மாறாக அளவிற்கு அதிகமாக சலுகைகளையும், தேவைக்கு அதிகமான பணத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கொடுத்ததன் விளைவே இன்று நாடு இந்த நிலைமைக்கு போய்விட்டது.

இவ்வாறான கொடுப்பனவுகளும் சலுகைகளும் கிட்டத்தட்ட இலஞ்சத்திற்கு ஒப்பானதாகும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். இருப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மேடைகளில் பேசும்போது இனவாதம், மதவாதம் பேசும் அரசியல் தலைமைகள் தங்கள் மதம் சார்ந்த, இனம் சார்ந்த மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்ட தன் விளைவையே மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள்.

புத்த குருமார்கள் தாங்கள், தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு தாங்கள் யார் என்று காட்டிவிட்டார்கள். இஸ்லாமிய தலைமைகளும் தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு, தாங்கள் யார் என்று காட்டிவிட்டார்கள். ஆனால் தமிழ்த் தலைமைகள் என்னசெய்யப் போகின்றார்கள்?

இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தந்தை செல்வா, அமரர் அமிர்தலிங்கம், அமரர் சிவசிதம்பரம் போன்றவர்கள் வலியுறுத்தினார்கள், அன்றுதொட்டு இன்றுவரை நானும், இந்தநாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதற்கு எனக்கு கிடைத்த பரிசு துரோகி பட்டம். இனியாவது நான் சொன்னதை அல்லது சொல்வதை கேட்பார்களா? ஏன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!