முஸ்லிம் அமைச்சர்களின் விலகல் பற்றி செவ்வாயன்று ஜனாதிபதிக்கு அறிவிப்பு! – ரணில்

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு இராஜினாமா கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும், அதற்கு மறுநாளே அமைச்சரவையில் வைத்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதுபற்றி அறிவித்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.

‘ பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு என்னிடம் அவர்களது இராஜினாமா கடிதங்களை கையளித்தனர். நான் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு அடுத்த நாள் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கு அது தொடர்பில் அறிவித்தேன் . எனினும், நம் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இராஜினாமா கடிதம் தனித்தனியே வழங்கப்பட வேண்டும் என்பதை அப்போது ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து நான் அவர்களிடம் தனித்தனியே இராஜினாமா கடிதங்களை கோரினேன். அவர்கள் அதனை இன்றைய தினம் தருவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

எவ்வாறெனினும் இடைப்பட்ட சில தினங்களில் முஸ்லிம் மக்களின் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனால் முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் அவர்களால் தமக்கான இராஜினாமா கடிதத்தை வழங்க முடியாமல் போயுள்ளது

அவர்கள் இன்றைய தினம் தனித்தனியே தமது இராஜினாமாக் கடிதங்களை எமக்கு கையளிப்பர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!