பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி குறித்து மோடி- ரணில் பேச்சு

பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் குறுகிய நேரப் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்று, கொழும்புக்கு அழைத்து வந்தார்.

பின்னர் அவர், கொழும்பில் பேச்சுக்கள் மற்றும் சந்திப்புகளை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வழியனுப்பி வைத்தார்.

காரில் தனியாகப் பேச்சு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வாகனத்தில் வரும் போது, இந்திய- சிறிலங்கா பிரதமர்கள், காரில் ஒன்றாக அமர்ந்திருந்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது மிக முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் ரணில் தகவல்

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முகநூலில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டமைக்காகவும், நாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்காகவும் இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, இது நம்பிக்கையைப் பலப்படுத்தும் என்றும், சிறிலங்காவுக்கு இன்னும் அதிகமான மக்கள் வருவதை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு உதவி கோரப்பட்டது

இந்தியப் பிரதமரின் பயணத்தின் போது, சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்பு பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதன் ஊடாக, பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட விவாகாரங்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.

சிறிலங்கா படைகளுடன் இந்தியா நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்றும், தீவிரவாத முறியடிப்பு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொண்டேன்.

திட்டங்களை விரைவுபடுத்த உறுதி

தாமதங்களை எதிர்கொள்ளும் எந்தவொரு இந்திய- சிறிலங்கா திட்டமும், விரைவுபடுத்தப்படும் என்று இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்துள்ளேன்.

மேலும், பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வகையில், இருநாடுகளுக்கும் இடையில் தொடர் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களின் அபிவிருத்தி

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை பிராந்திய விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பயண எச்சரிக்கைகளை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் மோடியின் இந்தப் பயணம், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!