சிறுமி அசீபா விவகாரம்-நீதிக்காக தனது சமூகத்தையும் எதிர்த்து நின்ற பெண் சட்டத்தரணி

இந்தியாவின் காஸ்மீரின் கதுவாவில் சிறுமி அசீபா பனோவை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்தவர்களிற்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளமை வாய்மையே வெல்லும் என்பதை மறுபடி நிரூபித்துள்ளது என சட்டத்தரணி தீபீகா சிங் ரஜாவட் தெரிவித்துள்ளார்.

சிறுமி அசீபா விவகாரத்தில் இறுதிவரை துணிச்சலுடன் போராடியவர் தீபிகா சிங் ரஜாவட்

இதற்காக அவர் கடும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் கருத்து தெரிவித்துள்ள அவர் உண்மை வென்றுள்ளது நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது என தெரிவி;த்துள்ளார்.

இது ஒரு நம்பிக்கை ஒளி,நாங்கள் பாராட்டவேண்டிய நடவடிக்கையிது என தெரிவித்துள்ள தீபிகா ரஜாவட் இந்த தீர்ப்பு நீதிமன்றம் எந்த வித அழுத்தங்களிற்கும் உள்ளாகவில்லை என்பதை புலப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பத்தவர்களிற்காக நீதிமன்றத்தில் ஆஜரான தருணத்திலிருந்து தீபிகா தனது சகாக்களினதும் சமூகத்தினதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார்.

முதல் நாள் முதல் இந்த வழக்கு எனக்கு கடும் சவாலாக காணப்பட்டது நான் எனது சமூகத்தையே எனது மக்களையே எதிர்த்துநின்றேன் என தீபிகா குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் சமூகத்தையே எதிர்த்து நிற்பது மிகவும் சவாலான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக அழுத்தங்கள் காரணமாக எனது குடும்பத்தவர்கள் இந்த வழக்கை நான் கையாளக்கூடாது என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வழக்கை கையிலெடுத்த பின்னர் தான் எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமி அசீபாவை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களில் முக்கிய குற்றவாளி எனக்கருதப்படும் சன்ஜி ராம், அவரது சகா பர்வேஸ்குமார் விசேட பொலிஸ் அதிகாரி தீபிகா கஜூரீயா ஆகிய மூவரிற்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது.

சன்ஜி ராம் குறிப்பிட்ட குற்றச்செயல் இடம்பெற்ற கோயிலின் முக்கிய அதிகாரியாக காணப்பட்டார்.

மேலும் இவர்களிற்கு 25 வருட சிறைத்தண்டனையையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதேவேளை ஆதாரங்களை அழித்த மூன்று காவல்துறையினருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

குறிப்பிட்ட காவல்துறையினர் மூவரும் முக்கிய குற்றவாளியான சன்ஜிராமிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஆதாரங்களை அழித்தனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!