பயணசீட்டு பரிசோதகரிடம் இருந்து தப்பிக்க ஓடிய வாலிபர்கள் மீது ரெயில் மோதி விபத்து – 4 பேர் பலி!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்துக்கு செல்லும் அவாத் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலையில் உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட பல்ராய் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரெயிலுக்கு பின்னால் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. எனவே இந்த அதிவேக ரெயிலுக்கு வழிவிடுவதற்காக அவாத் எக்ஸ்பிரஸ் ரெயில் பல்ராய் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஏறி முன்பதிவு பெட்டிகளில் இருந்த பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்தார். அப்போது இந்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத இளைஞர்கள் சிலர் இருந்தனர்.

அவர்களை பார்த்த டிக்கெட் பரிசோதகர் அபராதமாக தலா ரூ.500 வழங்குமாறு அந்த இளைஞர்களிடம் கேட்டார். உடனே அந்த இளைஞர்கள், டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்புவதற்காக ரெயிலில் இருந்து அடுத்த தண்டவாளத்தில் குதித்து ஓடினர். அப்போது அந்த தண்டவாளத்தில் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்தது. இந்த ரெயில் எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர்கள் மீது மோதியது. இதில் 4 இளைஞர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர விபத்தை பார்த்து பல்ராய் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், காயமடைந்த 6 பேரையும் மீட்டு சைபாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி உயிரிழந்த 4 வாலிபர்களும், உத்தரபிரதேசத்தின் கவு‌ஷாம்பி மாவட்டத்துக்கு உட்பட்ட ஜக்ராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு வேலைக்காக சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இந்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!