அனைத்துலக கடப்பாடுகளை அடுத்த அரசாங்கமும் மதிக்க வேண்டும்- அமெரிக்கா

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக கடப்பாடுகளை சிறிலங்காவின் எதிர்கால அரசாங்கங்கள் மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் குழுவொன்றைச் சந்தித்த போது, தனது பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத அந்த அதிகாரி, கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க – சிறிலங்கா உறவுகள் விரிவடைந்துள்ளன என்றும், அந்த நிலை புதிய அரசாங்கத்தின் கீழ் தொடருமா என்பதை இனிமேல் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், மனித உரிமைகளும் ஜனநாயகமும் மதிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தற்போதைய அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துலக கடப்பாடுகள், தொடர வேண்டும். நாங்கள் சிறிலங்காவுடன் 70 ஆண்டுகளாக உறவுகளை பேணுகிறோம். அது பல வடிவங்களில் தொடரும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

வணிக விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது என்றும், அந்தக் குழு முக்கியமாக ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பாக கலந்துரையாடும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அமெரிக்கா அண்மையில் விலக்கிக் கொண்டதை சுட்டிக்காட்டி, சோபா உடன்பாட்டில் சிறிலங்கா கையெடுத்திடுவதற்கு, அழுத்தம் கொடுப்பதற்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அமெரிக்கா பயன்படுத்துமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அந்த அதிகாரி, இந்த இரண்டும் வெவ்வேறு விடயங்கள் என்று கூறினார்.

அமெரிக்க குழுவினர் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மற்றும் அவரது அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என்றும், சிறிலங்காவில் இருந்து இன்னும் அதிகமான இறக்குமதிகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து அவர்கள் ஆராய்வர் எனவும், அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்க படைகளின் வருகை தருவது தொடர்பான உடன்பாடு குறித்து ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிபூர்வமான கட்டுரைகள் குறித்து அறிந்திருப்பதாகவும் அந்த அமெரிக்க அதிகாரி, குறிப்பிட்டார்.

“சிறிலங்காவில் குற்றம் செய்யக் கூடிய அமெரிக்கப் படையினரை நாங்கள் அமெரிக்க இராணுவ சட்டங்களின் கீழ் தண்டிப்போம்.

இன்னொரு நாடு அமெரிக்க இராணுவ வீரரை தடுத்து வைப்பதால் ஏற்படக் கூடிய அரசியல் பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

தவறிழைத்தவர்கள் அமெரிக்க இராணுவ சட்டங்களின் கீழ்அ தண்டிக்கப்படுவார்கள் என்பது, கெட்ட நடத்தையை தடுக்கும். ஆனால் இது மிகவும் உணர்வுபூர்வமான விவகாரம்” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!