அமைச்சரவையை கூட்டுமாறு சிறிலங்கா அதிபரை கோரும் தீர்மானம் – அரசாங்கம் முயற்சி

சிறிலங்கா அதிபருக்கும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரும் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐதேமு அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

தெரிவுக்குழு விசாரணையை நிறுத்தாவிடின், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கடந்தவாரம் அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று நடந்திருக்க வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபரிடம் கோருகின்ற தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது குறித்து சட்ட நிபுணர்களுடன் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

சிறிலங்கா அதிபர் அமைச்சரவையைக் கூட்டாவிட்டால், பிரதமருக்கு அமைச்சரவையைக் கூட்டும் அதிகாரத்தை வழங்குவது குறித்தும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

அரசியலமைப்பின் படி, அமைச்சரவையின் தலைவராகவும், உறுப்பினராகவும் சிறிலங்கா அதிபர் இருக்கிறார். எனினும், அமைச்சரவையைக் கூட்டுகின்ற அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற தெளிவான வரையறை அரசியலமைப்பில் கொடுக்கப்படவில்லை.

எனினும், கடந்த காலங்களில் சிறிலங்கா அதிபர் வெளிநாடு சென்றிருந்த போது அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!